Wednesday 23 September 2015

பிரம்ம ஹத்தி தோஷம் விரிவான விளக்கம்! பிரம்மஹத்தி தோஷம்,ஸ்ரீ்ராமர்,சாயாஹத்தி, வீரஹத்தி

ஹத்தி என்றால் அழித்தல். இதே போன்று போரில் ஒருவரைக் கொன்று விட்டால் வீரஹத்தி தோஷம் என்றும், கருவைக் கலைத்தால் ப்ரூணஹத்தி தோஷம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. எந்த விதத்திலும் யாரையும் கொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. கொல்லாமை என்னும் அகிம்சையே ஆன்மிக வாழ்வின் அடிப்படைத் தத்துவம்.

ராவணன் மிகச் சிறந்த மாவீரராக அறியப்பட்டவன். கார்த்தவீர்யார்ஜூனன், வாலி ஆகிய இருவரையும் தவிர, தன்னுடன் போரிட்ட அனைவரையும் வெற்றி கொண்டவன். ஒரு சிறந்த வீரனைக் கொன்றதால் ராமருக்கு, ‘வீரஹத்தி தோஷம்’ உண்டானது.  வீரஹத்தி தோஷம் விலக, வேதாரண்யம் (திரு மறைக்காடு) என்ற திருத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார்.

நரகாசுரனைக் கொன்றதால், விஷ்ணுவுக்கு வீரஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் ஏற்பட்டால் உடலும், முகமும் களை இழந்து விடும். இதைப் போக்க என்ன வழி என, சிவபெருமானிடம் ஆலோசனை கேட்டார்.  "இந்த சம்பவம் நிகழ்ந்தது துலா மாதத்தில். இந்த மாதம் முழுவதும், சூரிய உதயத்தில் இருந்து, ஆறு நாழிகை (144 நிமிடம்) வரை, இவ்வுலகிலுள்ள, 66 கோடி தீர்த்தங்களும் காவிரியில் வாசம் செய்யும். அந்த நேரத்தில் அதில் நீராடினால் தோஷம் நீங்கும்...' என்றார். விஷ்ணுவும் அவ்வாறே நீராடி, தோஷம் நீங்கப் பெற்றார். தன் மைத்துனருடன் சிவனும் நீராட அங்கே வந்தார். சிவ விஷ்ணு தரிசனத்தை ஒரே நேரத்தில் பெற்ற மகிழ்ச்சியில், எல்லா தேவர்களும் நீராடினர்.

ராவணன் சிறந்த சிவபக்தன். வீணை வாசிப்பதில் வல்லமை படைத்தவன். அதுவும் சாம கானம் பாடுவதற்கு அவனுக்கு நிகராக எவருமில்லை. இதனை ‘சாயை’ என்பார்கள். சாயை என்பது ஒளியை குறிக்கும். ஒளி போன்ற பெருமை வாய்ந்த குணங்களை குறிப்பிடும் ‘சாயை’ பெற்ற ராவணனைக் கொன்றதால், ‘சாயாஹத்தி தோஷம்’ ராமரை பற்றிக்கொண்டது. சாயாஹத்தி தோஷம் நீங்க பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமபிரான்

 'ஹத்தி' என்றால் 'மாய்த்தல்' என்று பொருள். இதன்படி அறிந்தோ, அறியாமலோ எதையேனும் மாய்ப்பதால் ஏற்படும் தோஷம் பிரம்ம ஹத்தி தோஷம். ஹத்தியில் பல வகைகள் உண்டு. இதில் களைவதற்கு மிகவும் கடினமானது 'பிரம்ம ஹத்தி' தோஷம்.

எளிதில் தீர்க்க இயலாததாய், கடுமையான தோஷங்களில் ஒன்றாய் இருக்கும் 'பிரம்ம ஹத்தி' தோஷம், பல வகைகளில் நாம் வாழும் கலியிலும் மானுடர்களை அண்டித் துன்புறுத்தும் என்பதை இன்றும் பலர் அறியார். அறிய வேண்டிய தருணமும் வந்துள்ளது.

'பிரம்ம ஹத்தியின்' கடுமையைக் கருதி, சமுதாய வழக்கிலும், 'பிரம்ம ஹத்தி' என்று பிறரை வசைபாடக் காண்கிறோம். கரிய நிழலாய் எங்கும், எப்போதும் ஒருவரை 'பிரம்ம ஹத்தி' தொடர்வதாம். உறக்கத்திலும் கூட, கரிய வடிவில் வந்து அச்சுறுத்தும்.  பிரம்மஹத்தி தோஷம் பற்றிய துல்லியமான விளக்கங்களைச் சமுதாயத்திற்குப் புலப்படுத்தி, தக்க நிவாரண வழிமுறைகளை அளிக்க வந்தவர் அத்திக்காய் சித்தர்.

புராணங்களில் 'பிரம்மஹத்தி தோஷம்' பலரையும் பற்றிக் கொண்டு துன்புறுத்திய சம்பவங்களைக் காண்கின்றோம்.

அதர்மமாய் ஆட்சி புரிந்து, கோடிக் கணக்கானோரை வதைத்த அரக்கனான ராவணனை ஸ்ரீ்ராமர் மாய்த்தது அவதார தர்ம காரியம்.
எனினும், இலங்கைப் போரில் எண்ணற்றோர் மாய்ந்தமையால், ஸ்ரீ்ராமருக்கும் கூட பிரம்ம ஹத்தி, சாயாஹத்தி, வீரஹத்தி போன்ற தோஷங்கள் ஏற்பட்டன. மேலும், தம் பரிவாரங்களைச் சார வேண்டிய தோஷங்களையும், பொறுப்புள்ள படைத் தலைவராய் ஸ்ரீ்ராமர் தம்முள் ஏற்றுக் கொண்டார் என்றும் விளக்குவதுண்டு.

இத்தகைய பிரம்ம ஹத்தி, சாயாஹத்தி, வீரஹத்தி தோஷங்களைக் களைவதற்காய், ஸ்ரீ்ராமர் தம் குலகுருவின் வாக்கின்படி, ராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டை ஆற்றியதையும், பட்டீஸ்வரம், வேதாரண்யம் போன்ற தல வழிபாடுகளையும் மேற்கொண்டார்.

பரம்பொருளாம் ஸ்ரீ்ராம தெய்வமே, ஓர் அவதார புருஷராய், இவ்வாறு சமுதாய நியதிக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டு, பல்வகை ஹத்தி தோஷங்களைத் தம்முள் ஏற்றுத் தக்கப் பரிகாரங்களை ஆற்றுகின்றார் என்றால், சாதாரண மானுடர்களாகிய நாமெல்லாம் எந்த 'மூலைக்கு'? கலியில் நாமும் இவற்றை நிச்சயமாய் ஆற்றத் தானே ஆக வேண்டும்.

மானுடர்களுக்குப் பல்வகைகளில் ஏற்படும் ஹத்தி தோஷங்கள் - 'ஹத்தி மூலை அல்லது அத்தி மூலை' - என்பதாய் அவரவர் உடலில் ஒரு மூலையில் பதிந்திருக்கும். தக்க பரிகார, பிராயச் சித்தங்கள் மூலம், இத்தகைய ஹத்தி (மூலை) தோஷங்களை அகற்றிட வேண்டும்.

'ஹத்தி மூலையே' வழக்கில் அத்தி மூலை என்றாயிற்று. ஜாதகத்தில், தோஷங்களை இத்தகைய 'அத்தி மூலைக் கோணம்' வகுப்பு மூலமாய் அறிவர்.

ஆக, பிரம்மஹத்தி தோஷம் என்றால், பிரம்மமானது ஆத்ம சக்தியாய் உறைகின்ற உயிரை வதைப்பதால், மாய்ப்பதால் ஏற்படுவதாம். மேலும், பல வகைகளிலும் பிரம்ம ஹத்தி தோஷம், குறிப்பாய் நாம் வாழ்கின்ற இந்தக் கலியிலும் ஏற்படுவதுண்டு.

உலகத்தில் உள்ள அத்தனை ஜீவன்களின் உள்ளேயும் பிரம்மமானது ஆத்மாவாய் வீற்றிருக்கின்றது அல்லவா! இதில் ஆறாம் பகுத்தறிவைக் கொண்ட ஒரே ஜீவ வர்கம் மனித குலம். ஆதலால், அத்தனை கோடி மக்கள் நிறைந்த உலக மானுட வம்சம், சர்வ கோடி ஜீவன்களிலும் உன்னத ஆன்மீக ஏற்றத்தைப் பெற்றுள்ளது.

பெரும்பாலும் 80,000 பிறவிகளுக்கு பிறகு கிட்டுவது தான் மானுடப் பிறவி என்பதாலும் பெறுதற்கரியது மானுடப் பிறவி என்றாகிறது.

முற்காலத்திலே பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படுவதற்குப் போர்களும் காரணமாயின. தற்காலத்தில் கருக்கலைப்பு, பாலியல் தீவினை, வன்முறை, பயங்கரவாதம் போன்றவை - உயிர்களை அதர்மமாய் வதைக்கும் பாவத்தோடு, பிரம்ம ஹத்தி தோஷத்தையும் இணைத்துப் பெருக்குவதாகும்.

கலியுகத்தில் பிரம்ம ஹத்தி தோஷம் எவ்வாறு வரக் கூடும்?

குழந்தைப் பிறப்பு என்ற உத்தம அனுபூதியாய், கருப்பையில் வித்திட்டு, வளர்ந்து வரும் ஓர் உயிரானது, பிரம்மமாகிய ஆத்மசக்தி உள்ளே நிறைந்திருக்கும்படியாய்ப் பூவுலகிற்கு வந்து பிறத்தல் என்பது மிகவும் திவ்யமான இறைஅனுபூதி. ஒரு பவித்ரமான உயிர் பூமியில் புனிதமான வகையில் தோன்றுவதற்கான ஆண், பெண் இனக் கலப்பு என்பது,அதியற்புத உத்தம ஆன்மீக அனுபூதி. எனவே, வெறுமனே காமாந்திரச் சேர்க்கையால் மட்டும் ஓர் உயிர் பூமியில் தோன்றுவது என்று ஒரு போதும் எண்ணலாகாது. வெறும் சிற்றின்பத்தாலும் வருவதல்ல.

திருமணத்தில் ஓதப் பெறும் மந்திரங்களின் விளக்கங்கள், சாந்தி முகூர்த்தம் எனும் புண்ணிய வைபவம் போன்றவை ஆண், பெண் படைப்பின் பவித்ரத்தையும், குழந்தைப் பிறப்பின் புனிதத்தையும் நன்கு விளக்குவதாகும். இல்லறத்தார் யாவரும் விவாக (திருமண) வைபவத்திற்கான தொன்று தொட்ட மந்திரங்களைப் படித்துப் பார்க்க வேண்டும். இதுவும் ஓர் ஆன்மீக சாதகமே. ஜாதி, மத பேதமின்றி திருமண மந்திரங்கள் யாவர்க்கும் உரித்தானவையே.

தற்காலத்தில் திருமணங்கள் ஆடம்பரமாய், அவசர கோலத்தில் நிகழ்வதால், மந்திரங்களை ஓதுவது, பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதனால் தான், திருமணங்களை ஆலயத்தில் நிகழ்த்திக் கொள்ள வேண்டும் என்பது. இதன் வழியாய், ஆலயத்தில் பிரசன்னமாகும் 'மங்கள தேவதா மூர்த்திகள்' - ஓதாமல் விடுபட்டுப் போன விவாக மந்திரங்களின் சக்தியை ஆசியாய் அளிக்கும் பேற்றைப் பெற்றிடலாகுமே.

ஒவ்வொரு குழந்தைப் பிறப்பும், எத்தனையோ ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தீர்க தரிசனமாய், மேலுலகில் நிர்ணயிக்கப் பெறுவதாம். இந்தப் பரிசுத்தமான உண்மையை இனிதேனும் அறியவும்.

இரு விதமான ஆன்மீக சக்திகளின் ஐக்கிய அனுபூதிதான் சந்தான ப்ராப்தி எனும் பிள்ளைப் பேறாய்க் கனிகின்றது. ஒரு பறவை முட்டை இடுவதும், மீன் குஞ்சு பொறிப்பதும், மனிதனுக்குக் குழந்தை பிறப்பதும் அனைத்துமே திவ்யமான புண்யவாழீ அனுபூதிகள் தாம்.

இந்நிலையிலே, கருக்கலைப்பு துaதிருஷ்ட வசமாய் நிகழுமாயின், இந்த அதர்மச் சம்பவமானது, உயிர் வதையாவதால், பெரும் பாவச் செயலோடு, பிரம்மஹத்தி தோஷமாயும் கூட்டி வருகின்றது.

குழந்தைப் பிறப்பு ஓர் உத்தம ஆன்மீக வைபவம் என்ற உண்மை நிலையை இவ்வாறு சத்தியப் பூர்வமாய் சமுதாயத்தில் உலகத்தார் ஒவ்வொருவரும் உணரும்படி செய்தால், முறையற்ற கருக்கலைப்பு, பாலியல் காமாந்திரத் தீவினைகள், இந்த உலகில் ஒரு போதும் நிகழாது தடுத்து, ஜீவ சமுதாயத்தைக் காப்பாற்றிடலாகும். உலக மானுடச் சமுதாயமும், கிருத யுகம் போல் நல்ஒழுக்கத்துடன் துலங்கும். இதற்கான தக்க காப்பு சக்தி வழிபாடுகளுள் ஒன்று சப்தமாதர்கள் பூஜை.

நாடி கணிதத்தில், ஜோதிடத்தில், பிரம்மஹத்தி தோஷம் ஜன்ம ஜன்மமாய்த் துரத்திக் கொண்டு இருப்பதாய், ஜாதக ரீதியாய்ச் சிலருக்கு கணித்து உரைப்பர்.

நாம் எங்கே திரேதா யுகத்திலோ, கிருத யுகத்திலோவா வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம், பிரம்ம ஹத்தி நம்மைப் பற்றுவதற்கு? என்று பலரும் யோசிப்பர். ஆனால் நாம் எல்லா யுகங்களிலும் பிறந்து, பிறந்து, வினைகளைச் சேர்த்துக் கொண்டு, இப்போது கலியிலும் பிறந்து வந்துள்ளோம் என்ற உண்மை நிலவரத்தைப் பலரும் சரியாகச் சிந்திப்பதில்லை.

மேலும், நாம் என்ன மன்னர்களா என்ன, போர்களிலே பலரை மாய்த்து பிரம்ம ஹத்தி நம்மைப் பற்றுவதற்கு? - என்று எண்ணுவோரும் உண்டு. இவர்கள் ஹத்தி தோஷங்கள் பலவகைகளில் கலியிலும் ஏற்படும் என்பதை உணர்வதில்லை.

மரங்கள், வீடுகளிலே கூடு கட்டி இருக்கும் பறவைகள், அணில்கள் போன்றவை முட்டை, குஞ்சு இட்டிருக்கும். பல்லியின் முட்டை கூட வீட்டில், தோட்டத்தில் கிடப்பதுண்டு. அறிந்தோ, அறியாமலோ இவற்றை அகற்றும் போதும், இதிலும் உயிர் வதை ஏற்பட்டு, ஹத்தி தோஷம் ஏற்படுவதாகும். அறிந்தோ, அறியாமலோ பறவைகளின், பூச்சிகளின் முட்டைகளை உடைத்து விட்டால் கூட, அது உயிர்-ஹத்தி தோஷமாக வந்தமையும்.

இந்த மனசாட்சிப் பூர்வமான கோணத்தில், மானுட உலகு உண்மையைச் சிந்திக்க மறந்தமையால், ஹத்தி தோஷங்களுக்கான விளக்கங்களை - அத்திக்காய் சித்தர் (ஹத்திதோஷ நிவர்த்தி சித்தர்) சமுதாயத்திற்கு மீண்டும் எடுத்துரைப்பதற்காய் பூலோகத்திற்கு வந்தார்.

இப்பூவுலகிலே பரிகாரமோ, பிராயச்சித்தமோ இல்லாத கொடிய பெரும் பாவவினைச் சுமைகளுள் தற்கொலை, கருக்கலைப்பு, பாலியல் தீவினைகளும் அடங்கும்.

ஆனால் ''அறிந்தோ, அறியாமலோ வாழ்வில் நடந்தது, நிகழ்ந்து விட்டது. இதற்குப் பிராயச்சித்தம் கிடையவே கிடையாது என்று நொந்து கொண்டே தான் வாழ்ந்து கொண்டிருப்பதா? - என்ற சிந்தனையும் பலருக்கு எழக் கூடும். எனினும், சீர்திருந்தி வாழ்தற்கு, கீழ்க் கண்டவற்றைச் சிந்தையில் பொருத்த வேண்டும்.

இனி வாழ்வில் இத்தகைய ஹத்தி தோஷம், பாவம் ஒரு போதும் நிகழாமல் இருப்பதற்கு, சித்தர்களின் இந்தத் தெள்ளிய விளக்கம் யாவார்க்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.

எந்த ஒரு சிறு பாவமானாலும் சரி, அதனதற்கான தண்டனையை அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும் - என்ற மனசாட்சிப் பூர்வமான அறநெறியை, ஒவ்வொருவரும் மனதார உணர்ந்து, ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும்.

'ஏதோ வாழ்வில் எப்போதோ செய்து விட்டேன், எப்படியாவது இவற்றில் இருந்து, எவ்வித தண்டனைக்கு ஆளாகாது தப்பித்து வெளி வந்தாக வேண்டும்' - என்று எண்ணுதல் அதர்மம். ஒருக்காலும் எந்த லோகத்திலும் இப்படித் தப்பித்தலும் நடக்கவும் நடக்காது, அவரவர் செய்த வினைக்கு அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும் என்று தெளிவாய் உணர்ந்து, மனதார தண்டனையை ஏற்கச் சித்தமாக வேண்டும்.

மேலும், சமுதாயத்தில் இதைப் பற்றி அறியாதோருக்கும் எடுத்துரைக்க, நம்முடைய சீர் தீருந்திய வாழ்வு ஒரு எடுத்துக்காட்டாக இருந்து பயனாகட்டும் என்ற வைராக்கியச் சித்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, இனியேனும் நன்முறையில் தூய்மையாய் வாழ வேண்டும்.

மேலும், இதுகாறும் தன் வாழ்வில் தாம் செய்த பெருந் தவறுகளை, பாவங்களை, பிற மானுடர்கள் தம் வாழ்வில் செய்யாமல் தடுத்து, தக்க அறவழி நல்வழி முறைகளை அளிப்பதும் உத்தமமான சமுதாயச் சேவை தான்.

இவ்வரிய சேவையை இனியேனும் வாழ்வில் அறப்பணியாய் செவ்வனே ஆழ்ந்த நம்பிக்கையுடன் இறைச் சமுதாயச் சேவையாய்த் தியாகமயச் சித்தத்துடன் ஆற்றி வந்தால், இறைவன் மனங் கனிந்திடில், ஆன்மீகச் சீர்திருத்தமாய், எவருடைய எத்தகைய கொடும் பாவத்திற்கும் தீர்வு கிட்டி, நல்வாழ்வு கனியும் அல்லவா.

''நாம் எந்த உயிரினத்திற்கும் துன்பம் இழைக்கவில்லையே, நமக்கு எவ்வாறு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதாக, ஜாதக ரீதியாக வருகின்றது?'' - என்று எண்ணுவதற்கு முன்னர், மேற்கண்ட அனைத்தையும் அலசி, ஆராய்ந்து தன் வாழ்வின் வெளிச் சொல்ல இயலாத உண்மையை, உண்மையாகவே அறிந்து கொண்டு, திருந்த முற்பட வேண்டும்.

இப்பிறவியில் மனதறிந்து எப்பாவமும் செய்யவில்லை என்றாலும், பூர்வ ஜென்ம வினைகள் மூலமாய் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டிருக்கக் கூடும் அல்லவா? இதனை அவரவருடைய ஜாதகம் நன்கு சுட்டிக் காட்டும்.

திருந்துதல் என்றால் மீண்டும் அதே பாவத்தை, குற்றத்தை எக்காலத்தும் வாழ்வில் இனியேனும் செய்யாதிருத்தல் என்பதே முக்கியமான பொருள். பரிகாரத்தைச் செய்து கொண்டே, அதே தவறை வாழ்வில் செய்து வந்தால், பரிகாரமும் பலியாது போகும், பிராயச் சித்தத்தை அவமதித்த தோஷமும் கூடுதலாய் வந்து சேரும்.

எனவே, ஒவ்வொருவருடைய மனிதப் பிறவியும், மனித வாழ்வில் வரும் இன்ப, துன்ப, தோஷங்களும், பலவிதமான காரண வினைகளுடன் தான் வந்து அமைந்துள்ளது, தன் கஷ்டத்திற்காய்ப் பிறரை நோகுதல் கூடாது என்ற அறநியதியை அறியவும்.

இவ்வாறு ஆத்மார்த்தமான உண்மையை வாழ்வில் உணர, உணரத்தான், எந்த மனித உடலும், உள்ளமும் சிறிது சிறிதாய் சுத்திகரிப்பை அடையும்.

கணிசமான பரிசுத்தம் கிட்டினாலே அங்கு பிரம்ம ஹத்தியால் ஒரு விநாடி கூடத் தங்க முடியாது, எந்த தோஷமும் தானே கழன்று, அகன்று விடும்.

பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்குமாய்ச் சில முக்கியமான தலங்கள் உள்ளன. எந்த விதத்திலே ஒருவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்து கொண்டார் என்பதைப் பொறுத்து நிவர்த்திக்கான வழிமுறைகளைப் பெற முடியும்.

பிரம்ம ஹத்தி தோஷம் முற்றிலும் அகல வேண்டுமாயின், பிரம்ம லோகத்து தேவதா மூர்த்திகளின் அனு கிரகத்தையும் பெற்றாக வேண்டும். இது தோஷ வகைக்கான நிவர்த்தியை எளிதாக்கித் தருவதாம். இதனை எவ்வாறு சாதிப்பது?

சாட்சாத் பிரம்ம மூர்த்தியே நிறுவிய -அடி அண்ணாமலைத் திருக்கோயிலைக் கொண்ட - திரு அண்ணாமலையில் ஆற்றும் அருணாசல கிரிவலம், இதற்குப் பெரிதும் உதவும். பிரம்ம மூர்த்தி தனித்துச் சன்னதி கொண்டருளும் தலங்கள் திருச்சி அருகே உத்தமர் கோயில், தஞ்சாவூர் அருகே கண்டியூர், திருச்சி-சிறுகனூர் அருகே உள்ள திருப்பட்டூர் போன்று ஒரு சிலவே. இவற்றில் பிரம்ம சக்தி நாட்களில், 24/36/64/108 பசு நெய் தீபங்களை ஏற்றி, கோ (பசு) பூஜை ஆற்றி வருதல் - கோஹத்தி போன்ற ஹத்தி தோஷ நிவர்த்திக்கான பிரம்ம லோகத்து மூர்திகளின் அருளைத் திரட்டித் தரும்.

அறிந்தோ, அறியாமலோ தற்கால வாழ்விலோ, பூர்வ ஜன்ம வினையாகவோ வாழ்வில் வந்து சேர்ந்து கொண்டு விட்ட பிரம்மஹத்தி தோஷத்தைத் தீர்த்துக் கொள்வதற்கான மற்றொரு வழிமுறை, தோஷங்கள் பற்றிய முக்கியமான இவ்விளக்கத்தைப் பிறருக்கு உரையாகவோ, நூலாகவோ, பிரதி எடுத்தோ விளக்கிச் சொல்வதாகும். அரிய இறைச் சமுதாய அறப்பணித் தொண்டிது.

பலருக்கும் வினைச் சுமையைத் தணித்து நன்கு நன்மை பயக்கும் இச்சேவையை, வாழ்நாள் முழுதும் ஆற்றி வருதல் சமுதாய நலவளவர இறைத் தொண்டு.

உலகில் ஏனைய மக்கள் இத்தகைய ஹத்தி தோஷங்களை அடையாமல் தற்காத்துக் கொள்வதற்கான தக்க வழிமுறைகளை எடுத்துரைப்பதை, உலகத்தார் ஒவ்வொருவரும் தம் கடமையாய் உணர வேண்டும். இதுவே அறிவு மற்றும் ஞானதானம் எனும் வித்யா தானமாயும் பயனளிக்கும்.

மேலும், இத்தகைய தோஷங்களால் பெரிதும் துன்பப் பட்டு வாழ்வோர்க்கு, இவ்வாறு தக்க தீர்வுகளைத் தக்க தருணத்தில் நல்குவதும் உத்தமச் சேவையாகும். பிறர் நலமுடன் வாழ்வதற்காய் ஆற்றும் தொண்டு, தம் துயரைத் தானாய்த் தீர்க்கும் என்பது ஆன்ம நியதி.

ஹத்தி தோஷங்கள் பற்றிய விளக்கங்களை, பற்பல தீர்வு முறைகளை அத்திக்காய் சித்தர் அளித்ததோடு, இவற்றை நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிக்கவுமான எளிய வழிகளையும் நல்கினார். குறிப்பாக, தாய், தந்தையர்க்கு ஆற்றும் சேவை, பலவிதமான தோஷங்களைத் தீர்க்க வல்லதாம்.

ஹத்தி தோஷங்கள் வினைச் சுமையை மென்மேலும் அதிகரிப்பதால், வாழ்க்கையில் இவை குறித்த காலத்திற்குள் நிவர்த்தி ஆகாவிடில், வாழ்வில் எத்தனை வசதிகள் இருந்தாலும், நிம்மதி இல்லாத சூழ்நிலை வருத்தி வாட்டும்.

பிரம்மஹத்தி தோஷத்திலும் கூட - பகல் நேர ஹத்தி தோஷம், இரவு நேர ஹத்தி தோஷம் - என்ற காலவகை நுட்பம் உண்டு

எனவே, பிரம்ம ஹத்தி தோஷம் மட்டுமன்றி எத்தகைய தோஷம் உள்ளவர்களும் - பகல் நேரத்தில் தீர்த்த நீராடல், வேள்வி, பூஜை, ஆலய தரிசனம், தான தர்மம் போன்றவற்றையும் இரவு நேர வழிபாடாய், ராத்ரீ சூக்தம் ஓதுதல், வைச்வதேவம் எனும் வேள்வி, திருவாசகத்தின் குழைத்த பத்து, தேவாரத்தில் காரைக்கால் அம்மையாரின் மூத்த கோயில் திருப் பதிகங்களை ஓதுதல், மார்கழியில் பெருமாள் தலங்களில் நிகழும் பகல் பத்து, ராத்திரி பத்து வழிபாடு, பல காலமாய் சிவாலயங்களில் நின்று போயுள்ள மாதாந்திர மாத சிவராத்திரி வழிபாட்டை மீண்டும் புனரமைத்தல், அருணாசலத்தில் மாதசிவராத்திரி நாள் கிரிவலம், ஆலயங்களில் இரவு நேர அர்த்தஜாம வழிபாடு, இரவு கால பைரவ பூஜை, பள்ளியறைப் பூஜை, சீர்காழி ஸ்ரீ்பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் பிரதி வெள்ளி தோறும் நள்ளிரவில் நடைபெறும் (கோயில் விமானத்தில் உள்ள) சட்டநாதருக்கான புனுகுக் காப்பு ஆராதனை போன்றவற்றையும்,

விடியற்காலையில், பிரம்ம முகூர்த்த (காலை 3 மணி) வேளையில் கோ பூஜை, கணபதி ஹோமம் போன்றவற்றையும் - முறையாய் ஆற்றி வர வேண்டும்.

No comments:

Post a Comment