Saturday 8 August 2015

திமுக ரூ.10 லட்சம் நிதியுதவி: ஸ்டாலின் வழங்கினார்



சேலம்: காந்தியவாதி சசிபெருமாளின் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிதி உதவியை சசிபெருமாளின் மனைவியிடம் ஸ்டாலின் வழங்கினார். சேலம் மாவட்டம் சித்தர் கோவில் அருகில் உள்ள இ.மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் காந்தியவாதி சசிபெருமாள்,59. இவர் கடந்த 31ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பகுதியில் இருந்த டாஸ்மாக்கடையை மூடக்கோரி அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார்.  அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. சசிபெருமாள் இறந்ததை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்தனர். சசிபெருமாளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் சேலத்தில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தனர். சசிபெருமாளின் கோரிக்கைகளை முழுவதும் நிறைவேற்றவில்லை என்றாலும், சேலம் மற்றும் மாவட்டம் முழுவதுமாவது மதுக்கடைகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிபெருமாளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பலர் சசிபெருமாளின் வீட்டிற்கு சென்று அவரது மகன்களிடம், உடலை வாங்கி வந்து இறுதி சடங்கு செய்யுங்கள். நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம். அவரது கோரிக்கைகள் நிறைவேற தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்தனர். இதை ஏற்று 7 நாட்களுக்கு பின்னர் சசி பெருமாளின் உடலை வாங்கிக் கொண்ட உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வியாழக்கிழமை நள்ளிரவு சேலம் புறப்பட்டனர். சசிபெருமாள் உடல் சரியாக இன்று மதியம் 12.15 மணியளவில், அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காடு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.பின்னர் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையின் மீது வைக்கப்பட்டது.

சசிபெருமாள் குடும்பத்துக்கு திமுக ரூ.10 லட்சம் நிதியுதவி: ஸ்டாலின் வழங்கினார்

No comments:

Post a Comment